இந்த ‘”ஹலால்” என்கிற வார்த்தைக்கு “சுத்தமானது” என்று பொருள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த “ஹலால்” என்கிற வார்த்தைக்கு அறிவியல் அடிப்படையில் ஆழ்ந்த பின்னணி உள்ளது என்பதை இங்கு பலர் அறியாமல் இருக்கின்றனர்.
“ஹலால்” என்பது அரபு மொழி வார்த்தையாகும். இஸ்லாமிய மத நூலான “குர்ஆன் அனுமதிக்கின்ற முறை” என்பது இந்த வார்த்தையின் பொருளாகும். ஹலால் முறையில் விலங்குகளை வெட்டுவதற்கு முன்பாக இஸ்லாமிய மத சடங்கை அறிந்த இஸ்லாமியர் ஒருவர் தங்கள் மத நூலான குர் ஆனில், விலங்குகளை பலியிடுவதற்கு முன்பாக கூறப்படும் பிரார்த்தனை மந்திரத்தை ஓதி, அவ்விலங்கை இறைவனின் பெயரால் ஆசிர்வதிப்பார்.
அவர் ஆசி வழங்கி முடித்ததும், கசாப்புக் கடைக்காரர் அந்த கால்நடையின் கழுத்தின் முன்பக்கத்தில் கூர்மையான கத்தியால் அந்த விலங்கின் கழுத்தை அறுத்து விடுவார். அப்போது அந்த விலங்கின் கழுத்திலிருந்து மிக அதிக அளவில் ரத்தம் வெளியேறும். ரத்தம் வெளியேறும் சமயத்தில் அந்த விலங்குகளின் கால்களும், உடலும் துடிதுடிக்கும். சிறிது நேரத்தில் அந்த விலங்கு இறந்து விடும். அதன் பிறகு அந்த விலங்கின் தோலை உரித்து, அவ்விலங்கின் மாமிசத்தை கசாப்பு கடைக்காரர் வெட்டி விற்பனைக்கு தயார் செய்வார்.
ஹலால் ரீதியில் விலங்குகளை பலியிடுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்:
ஹலால் முறையில் விலங்குகளை பலியிடும் நபர் விலங்குகளை பலியிட பயன்படுத்தும் கத்தியை மழுங்கல்கள் இல்லாமல் மிகக் கூர்மையாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
விலங்குகள் வலியை உணராதவாறு கழுத்து அறுக்கப்பட்டு, ரத்தம் வெளியேற்றப்பட வேண்டும்.
ஹலால் முறையில் விலங்குகளை பலியிடும் பொழுது, அந்த விலங்குகளின் கழுத்து நரம்பு குழாய்களும் மூச்சுக் குழாயும் ஒரு சேர அறுக்கப்பட வேண்டும்.
ஹலால் முறையில் விலங்குகளை பலியிடும் நபர்கள் அந்த விலங்குகளின் கழுத்தை அறுக்கின்ற போது எக்காரணம் கொண்டும் விலங்குகளின் தண்டு வட பகுதியை வெட்டி விட கூடாது. பலியிடப்படும் விலங்குகளின் கழுத்தை அறுக்கின்ற பொழுது, அவ்விலங்கின் தண்டுவடப் பகுதியையும் சேர்த்து அறுக்கும் பொழுது, விலங்கின் இதயத்துக்கு செல்கின்ற ரத்த நாளங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி பலியிடப்படுகின்ற விலங்கின் இதயத்தின் செயல்பாடு அப்படியே நின்று விடும். இதயம் நின்று போகும் பொழுது அந்த இதயத்திற்கு செல்கின்ற ரத்த நாளங்களில் ரத்தம் அப்படியே நின்று உறைந்து போய்விடும். இதன் காரணமாக விலங்கின் இறைச்சி கெட்டுபோய், அந்த இறைச்சி மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாக மாறிவிடும்.