இப்போது நாம் வாழ்வது நான்காவது பரிமாணம். (4D world) என்றாலும், Interstellar ஆங்கில படத்தில் காட்டுவது போல், 5D world ஐந்தாவது பரிமாண உலகம் என்பது சாத்தியமா ? அறிவியல் படி சாத்தியம்!
நமக்கு கீழே 3 உலகங்களும், மேலே 6 உலகங்களும் உள்ளன. எளிமைப்படுத்துவதற்காக இங்கே பரிமாணங்கள் என்பதை உலகங்கள் என்று மாற்றுகிறேன்.
அதே போல் மொத்தம் உள்ள பத்து பரிமாணங்களை உங்களுக்கு புரிய வைப்பதற்காக அவைகளுக்கு பெயர் கொடுக்கிறேன். விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு : இங்கே தசாவதாரங்களையும் நான் சொல்வது, சும்மா எண்களாக இல்லாமல், எல்லாம் பெயராக இருந்தால் எளிதாக நினைவில் இருக்கும் என்பதற்காக! மற்றபடி நான் இங்கே, இந்து மதத்தையோ தசாவதாரத்தையோ அறிவியல் பூர்வமாக விளக்குகிறேன் என்று எண்ண வேண்டாம். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் தவறாக சண்டைக்கு வர வேண்டாம். எல்லோரும் இந்த அறிவியல் கட்டுரையை படிக்க வேண்டும், படித்து புரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்து உங்கள் கற்பனையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள, அறிவியல் தேடலுக்கு உங்களை அழைத்துச் செல்லுகிறேன், வாருங்கள்!
ஒரு புள்ளி, பூஜ்ஜியம் Zero என்று வைத்துக் கொண்டால், அதில் தான் கடவுள் எல்லா பரிமாணங்களையும் உருவாக்க ஆரம்பித்து, கடைசியில் ஒரு புள்ளி Infinity என்பதில் முடிக்கிறார்! ரிக் வேதத்தில், “தானே ஒன்று உருவாகி அதிலிருந்து எல்லாவற்றையும் தோற்றுவித்து பின்பு அது மீண்டும் ஒரு புள்ளியிலே அடங்குவது தான் இந்த உலகங்கள்” என்று சொல்லுவதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
அறிவியல் பூர்வமாக உருவாகிய அந்த முதல் புள்ளியை, Bing Bang என்று வைத்துக் கொள்வோம். இந்தப் புள்ளி கோடாகி அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பு, அது ஒரு புள்ளி அவ்வளவுதான்.
இதைத்தான் கம்பர் ஏற்கனவே கற்பனை செய்து விட்டார். ” உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெற்றிருத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டுடை யார் அவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! ” என்று புரிதலுக்காக வைத்துக் கொள்ளலாம்.
1D ஒரு புள்ளி, Point, ஒரு கோடாக மாறி 2D, அது ஒரு shape போல் மாறி 3D ( நம்முடைய உலகம்), அது நான்கு முப்பரிமானங்கள் எடுத்தால் அதுவரை அது கணிதத்தில் அடங்கும்!
முதல் பரிமாணம் (1 Dimension World), மச்சம் :
ஒரு புள்ளி அதாவது, ஒரு மச்சம் என்று வைத்துக் கொள்ளலாம். இல்லை ஒரு சின்ன மீன் முட்டை, என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்தப் புள்ளி, அதாவது Point என்பதற்கு நீளம் அகலம் எதுவுமே கிடையாது. Just a point! இப்படிப்பட்ட ஒரு புள்ளி, புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஒளி துணுக்கு Light Photon ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள். நேராக அது சென்று கொண்டிருக்கும். Ray அல்லது கதிர் என்று சொல்லலாம். முன்னே பின்னே அது நேராக செல்லும், இங்கே நீளம் கிடையாது அகலம் கிடையாது எதுவுமே கிடையாது. இதுதான் முதல் பரிமாணம். இது கொஞ்சம் எளிமையாக புரியும்!
இப்போது அந்த, புள்ளியை ஒரு எறும்பாக கற்பனை செய்து கொண்டால், அந்தக் கோட்டை ஒரு குழாய் போல் கற்பனை செய்து
கொள்ளுங்கள். ஒரு எறும்பு ஒரு சிறிய குழாயில் முன்னே பின்னே மட்டும் சென்று கொண்டிருந்தால், அதுதான் 1D உலகம்!
இரண்டாவது பரிமாணம் (2D), ஆமை :
இப்போது ஒரு கடல் ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தக் கடலில் நீர்மட்டத்தில் ஒரு ஆமை மிதக்கிறது. அது கடல் மட்டத்தில் என்ன இருக்கிறது அதை மட்டும் தான் பார்க்க முடியும். இதுதான் இரண்டு பரிமாண 2D உலகம்!
ஒரு பந்து மேலே செல்லும் எறும்பை, அந்த ஆமை இப்படி அப்படி அசையும் ஒரு கோடு போல் பார்க்கும். ஆனால் எறும்பால் ஆமையை பார்க்க முடியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் குழாயில் ஒரு புள்ளி. புள்ளி ஒன்று தெரிந்தால் எதிரில் வருவது, ஆமை அல்லது பந்து, ஆனால் எறும்பின் கண்களுக்கு வெறும் புள்ளி!
ஆமை கண்களுக்குத்தான் எறும்பு போடும் கோடு தெரியும். அதற்கு பெயர் Line!
ஆனால் அதற்கு மேல் உள்ள முப்பரிமான பந்து ஒன்றை, மேலே இருக்கும் ஆமை சின்ன வட்டம் போல் பார்க்கும். நடுவில் இருக்கும் ஆமை பெரிய வட்டம் போல் பார்க்கும். கீழே இருக்கும் ஆமை சின்ன வட்டம் போல் பார்க்கும். அது வட்டமாக பார்த்தாலும் அது வட்டம் இல்லை! அது ஒரு 3D Sphere என்று யாருக்கு தெரியும்?
மூன்றாவது பரிமாணம் 3D (வராஹம்) :
அதற்கு மேலே உள்ள நான்காவது பரிமாணத்தில் வாழும் ஒரு ஜீவன், அதாவது இரண்டு கண்களுடைய ( இரண்டு கண்களும் ஒரே தட்டையில் உள்ள ) ஒரு மிருகத்துக்கு, சிங்கம் புலி க்கு மட்டும் தான் அப்படி தெரியும்! அதனால் பன்றி உலகம் என்று வைத்துக் கொள்வோம்.
எறும்புக்கு புள்ளியாக தெரியும், ஆமைக்கு வட்டமாக தெரியும், ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் அது ஒரு பந்து போல் தெரியும்!
ஆமைக்கு பந்து நகர்ந்தால் ஒரு கோடு போல் தெரியும். இரண்டு கண்கள் கொண்ட ஒரு மிருகத்துக்கு தான் பந்து பறப்பது தெரியும்! ஒரு நாய் ஒரு பந்தை கேட்ச் பிடிப்பது இப்படித்தான்!
மனிதனுக்கு முப்பரிமான கண்கள் இருந்தாலும், அவன் அதைத் தாண்டி நான்காவது பரிமாணத்தில் வாழ்கிறான். மனித கண்களுக்கு முப்பரிமான பிம்பங்கள் தெரிந்தாலும், தனக்கு மேலே ஒரு சக்தி, அவன் கண்களுக்கு மட்டும் முப்பரிமானத்தில் தெரியும்.
(ஆனால் ரொம்ப தூரத்தில் இருந்தால், சூரியன் சந்திரன் போல் ஒரு வட்டமாக தான் தெரியும் )
நான்காவது பரிமாணம் 4D ( நரசிம்மம் ) :
மனிதன் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை. ஒரு பெண்ணை பார்த்தால் மனிதன் மிருகமாக மாறிவிடுவான். அது ஒரு குழந்தையை பார்த்தால் மனிதன் கடவுளாக மாறிவிடுவான்! யாரை பார்க்கிறான் என்பதில் தான் மனிதன் உணர்ச்சிகள் இருக்கின்றன.
ஆனால் அதைவிட முக்கியமாக நான்காவது பரிமாணத்தில் மனிதன் வாழ்வது காரணம்.
அதாவது நான்காவது பரிமாணம் என்பது காலம் அல்லது நேரம். மனிதனுக்குத் தான் நாம் காலத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரியும். காலமும் விண்வெளியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று புரியும்.
தனக்கு கீழே உள்ள மூன்று பரிமாணங்களையும் தெளிவாக பார்க்கக் கூடிய மனிதன், அவற்றை மாற்றும் சக்தி படைத்த மனிதன், வழக்கம்போல் தனக்கு மேலே உள்ள நான்காவது பரிமாணத்தை பார்க்க முடியாது. மாற்ற முடியாது!
இதுவரை நாம் கற்றுக் கொண்டது :
தனக்கு கீழே உள்ள பரிமாணங்களை ஒரு உயிர் மாற்ற முடியும். தன்னுடைய பரிமாணத்தை அதனால் மாற்ற முடியாது.
ஒரு புள்ளி மாறினால் அது கோடு. இது இரண்டாவது பரிமாணம். ஒரு கோடு மாறினால் அது வட்டம். இது மூன்றாவது பரிமாணம். ஒரு வட்டம் மாறினால் அது பந்து. இது நான்காவது பரிமாணம்.
அதாவது ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டு, ஒரு கத்தியால் SLICE பல போட்டால், சிப்ஸ் போல் சிறிய வட்டம் பெரிய வட்டம் என்று பல சைஸ் கிடைக்கும். இப்படி எல்லா ஸ்லைஸ் களையும் ஒன்றாக அடுக்கினால் அதுதான் ஒரு முப்பரிமான ஆப்பிள்!!
அடுக்கி வைக்கப்பட்ட பல பேப்பர்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பேப்பரும் ஒரு 2d உலகம்.
ஒரு பேப்பரில் இருக்கும் எரும்பு மேல் உள்ள பேப்பருக்கு செல்ல முடியாது. பல பேப்பர்கள் இருப்பது அதற்குத் தெரியாது போகவும் முடியாது. அந்தந்த பேப்பரில் அந்தந்த எறும்பு உலகம்.
ஆனால் எல்லா பேப்பரையும் ஒரு ஊசி கொண்டு கோர்த்து போகும் போது, ஒரு ஊசி வழியாக ஒரு ஏறும்பு ஒரு பேப்பரில் இருந்து இன்னொரு பேப்பருக்கு செல்ல முடியும். 2D யில் பேப்பர் என்பது 3D யில் Space time fabric இன்று வளைந்த ஒரு முப்பரிமான விண்வெளி, காகிதம் போல் வளைந்திருக்கும் பொழுது, பல்லாயிரம் கோடி மைல்களை குறுக்கு வழில் சீக்கிரமே அடைவது தான் ஒரு 3D ஊசி என்னும் Wormhole! விண்வெளியில் இவை இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்!
பல பேப்பர்களை இணைக்கும் அந்த ஊசி தான், Worm Hole.
நம்முடைய விண்வெளியும் இப்படித்தான். வளைந்து இருக்கும் 3D காகிதம் கற்பனை செய்து கொள்ளுங்கள். விண்வெளியில் பல மைல் தூரம் செல்லும் ஒரு வாகனம், குறுக்கு வழியில் சென்றால், Andrameda கேலக்ஸிக்கு சென்று விடலாம்!
ஐந்தாவது பரிமாண 5D உலகம் (வாமனன் ):
எப்படி மனிதன் மேலே கீழே நகர முடியுமோ, அதாவது பல Slice வட்டங்களை சேர்த்து ஒரு உருளைக்கிழங்கு அல்லது ஆப்பிள் என்று மொத்தமாக பார்க்க முடியுமோ, அதுபோல் நான்காவது பரிமாணமான நேரம் என்பதும் SLICE போல் இந்த ஐந்தாவது வாமனர்களுக்கு தெரியும்.
முதலில் ஆப்பிளை நறுக்கினால், சின்ன வட்டம் SlICE.. பிறகு பெரிய வட்டம் என்று சிப்ஸ் போல் நறுக்கலாம். அத்தனை வட்டங்களையும் SLICE எல்லாவற்றையும் சேர்த்தால் அது தான் ஒரு 3டி ஆப்பிள்!!
அதுபோல் காலத்தில் வாழும் மனிதன் ஒவ்வொரு நிமிடத்தையும் SLICE போல் அல்லது ஒரு ஃபிலிம் போல் அடுக்கிக்கொண்டே வந்தால், அதுதான் மனித வாழ்க்கை!!
இந்த காலம் என்ற உலகத்தில் மனிதன் ஒரே பாதையில் தான் செல்ல முடியும். எறும்பு குழாயில் நேராக போவது போல், மனிதன் நேராக சென்று கொண்டிருக்க வேண்டும். குழாயை துண்டு துண்டாக நறுக்கியது போல், மனித வாழ்க்கையை துண்டு துண்டாக எடுத்தால் அதுதான் நம் குழந்தை முதுமை போன்ற பருவங்கள்.
அல்லது ஒவ்வொரு ஸ்லைஸ் புத்தகங்கள் அடுக்கியது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தை பருவம் ஒரு புத்தகம். உங்கள் பள்ளிக்காலம் ஒரு புத்தகம். நீங்கள் பக்கத்து வீட்டு பெண்ணை சைட் அடித்தது ஒரு புத்தகம். ஜாலியான புத்தகம். உங்கள் திருமண வாழ்க்கை ஒரு சோகமான புத்தகம். உங்கள் மரணம் ஒரு சஸ்பென்ஸ் நாவல்
இப்படி புத்தகங்கள் அடுக்கினால், உங்களால் ஒரு புத்தகத்திலிருந்து அடுத்த புத்தகத்திற்கு மட்டும்தான் போக முடியும். ஆனால் நமக்கு மேலே உள்ள ஒரு ஐந்தாவது பரிமாண நபருக்கு, எந்த புத்தகத்தில் நுழைய வேண்டும் என்று ஏறி இறங்கி நுழையலாம்!
ஆனால் நமக்கு மேலே உள்ள ஐந்தாவது பரிமாணத்தில் வாழும் ஒருவருக்கு, எந்த ஸ்லைஸ் SLICE உள்ளேயும் போக முடியும்.
இதைத்தான் இன்டர்ஸ்டெல்லர் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில், Cooper என்ற கதாநாயகன், வாழ்க்கை முழுவதையும் ஸ்லைஸ் போட்டு பார்ப்பார். தேவைப்பட்ட தருணத்திற்குள் நுழைவார்!
நமக்கு மேலே உள்ள பரிமாணம், ஒரு மாதிரி மங்கலாக தெரியும். அதாவது ஒரு 3டி ஷேப் தெரியும். 3D பந்து ஒன்று நம் கண்களுக்கு தெரியும். ஆனால் அது ஒரு 3d பந்து இல்லை. இப்படித்தான் நம் கண்களுக்கு ஏலியன்கள் ஒரு ஒளிப்பந்து போல் காட்சி அளிக்கலாம்.
அவர்கள் கண்களுக்கு நாம் நான்கு பரிமாணத்தில் தெரிவோம். அதாவது நாம் குழந்தையாக இருந்து சாகும் வரை இருக்கும் மொத்த பரிமாணமும் அவர்கள் கண்களுக்கு தெரியும். இதைத்தான் அந்த காலத்தில் சித்தர்கள் என்று வர்ணித்தார்கள்.
நான்காவது பரிமாணத்தில் வாழ்பவன் மனிதன் என்றால், ஐந்தாவது பரிமாணத்தில் வாழ்பவர் ஒரு சித்தர்! அதுதான் வாமனன்.
ஆறாவது பரிமாணம் 6D world : பரசுராமன்:
ஒரு மனித வாழ்க்கையில், நேராக செல்லாமல் குறுக்காக வெட்ட வேண்டும்.
அதாவது உங்கள் வாழ்க்கை பயணம், உங்களுக்குப் பிடித்த ஒரு நண்பர் வாழ்க்கை பயணம், அல்லது நீங்கள் விரும்பும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை பயணம் எல்லாம் ஒரு நேர்கோட்டில் செல்லும் பொழுது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் இடம் மாறினால்?
உங்களைப் போன்று ஆயிரம் நபர்கள் ஆயிரம் உலகத்தின் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, இரண்டு பேர் இடம் மாறினால்? இந்த உலகத்தில் நீங்கள் பணக்காரர் என்றால், வேறொரு உலகத்தில் ஏழை. இந்த உலகத்தில் நீங்கள் ஏழை என்றால் வேறொரு உலகத்தில் பணக்காரராக இருக்க வாய்ப்பு! எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வந்தால்?
அதாவது ஒரு தருணத்தில், உங்கள் பொண்டாட்டியை கல்யாணம் செய்து கொள்கிறீர்கள். ஆனால் அந்த தருணத்தில் நீங்கள், எத்தனை பிரபஞ்சத்தில் வாழ முடியும்? குறுக்காக அடுக்கினால், பல பல பெண்கள் நீங்கள் திருமணம் செய்து கொண்டிருக்க முடியும். இதுதான் PARELLEL UNIVERSE. அந்த உலகங்களில், 20 வயதில் நீங்கள் ஏ ஆர் ரகுமான். 60 வயதில் நீங்கள் ஜெமினி கணேசன் ஆக கூட இருக்கலாம்.
இந்த ஆறாம் உலகத்தில் இருக்கும் ஒருவர், 20 வயதில் தடால் என்று ஏ ஆர் ரகுமான் போல் மாறலாம். அதாவது நேராக காலத்தில் குதிப்பது போல், குறுக்காக அடுத்த உலகத்தில் குதிக்கலாம்.
ஏழாவது பரிமாணம் 7D : ராமன் பரிமாணம் :
காலத்தில் நேராக செல்லாமல் இஷ்டத்திற்கு குதிக்கலாம், இது ஐந்தாவது பரிமாணம்.
குறுக்கு வெட்டாக, நீங்கள் பலவிதமாக மாறலாம்
இது ஆறாவது பரிமாணம். அதான் எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று இருக்கும் பொழுது, இதற்கு மேல் எப்படி பரிமாணம் இருக்க முடியும்?
போதும் இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று சொல்லாதீர்கள்.
நினைத்த இடத்திற்கு செல்வது, நினைத்தபடி இருப்பது, இவையெல்லாம் மாற்றினால் போதாது. ORIGIN POINT அதாவது ஆரம்ப புள்ளியையே மாற்றுவது தான் ஏழாவது பரிமாணம்.
CHAOS THEORY.. அதாவது ஆரம்ப நிலைகள் மாறினால் மொத்த வாழ்க்கையும் மாறிவிடும். ஒரு முட்டாள், கருணாநிதி வீட்டில் பிறந்தால் முதலமைச்சராக மாறிவிட முடியும்!!
உங்கள் தாய் தந்தையரை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் உங்களுக்கு இந்த உலகத்தில் கிடைக்கும். நான் தசரதனுக்கும் கௌசல்ய்க்கும் பிறக்கப் போகிறேன் என்று ராமன் முடிவு செய்து பிறப்பது போல்!!
நினைத்த நேரம் நினைத்த இடம் மட்டுமல்ல, நினைத்த பெற்றோர்களுக்கு நினைத்த நேரத்தில் பிறப்பது, உங்கள் உலகமாக இருந்தால், நீங்கள் ராமனாக மாறி விடுவீர்கள்.
எட்டாவது பரிமாணம் 8D world, பலராமன் :
அங்கேதான் இருக்கிறது விஷயம். நினைத்த நேரத்தை மாற்றுவது ஐந்தாவது பரிமாணம் என்றால், நினைத்த உலகத்தில் மாறுவது ஆறாவது பரிமாணம் என்றால், நினைத்த ஆரம்ப புள்ளி அதாவது அப்பா அம்மாவுக்கு பிறப்பது ஏழாவது பரிமாணம் என்றால் கூட, இதுவரை பார்த்த ஏழு உலகங்களிலும், எல்லாம் ஒரு விதிகளுக்கு உட்பட்ட உலகம். ராமன் மனித உலகில் பிறவி எடுத்தது போல், பிறவி எடுத்தாலும், ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் ராமர் வாழ முடியும். இந்த விதிகள், SET OF LAWS, PHYSICS அதாவது, GRAVITY கீழே இழுக்கும் , வாழ்க்கை பிறப்பில் ஆரம்பித்து இறப்பில் முடியும், நெருப்பு சுடும், மைனஸ் 100 டிகிரி என்பது குளிர் என்பது போன்ற எந்த விதியும் அடுத்த பரிமாணத்தில் கிடையாது.
இங்கே MATTER என்றால் அங்கே ANTI MATTER! சில உலகங்களில் எல்லாவிதிகளும் தலைகீழாக இருக்கும். சில உலகங்களில் எடை சக்தி எல்லாம் பல மடங்கு அதிகமாக இருக்கும். வினோதமாக கிழவனாக பிறந்து குழந்தையாக சாகும் உலகம் கூட இருக்கலாம். The Curious Case of Benjamin Button என்ற ஆங்கில படம் போல் வயதாகப் பிறந்து குழந்தையாக சாவோம்.
சில உலகங்களில், புவியீர்ப்பு சக்தி என்பது பறக்க வைக்கும், ஒளியின் வேகம் இரண்டு மடங்கு, என்று வேறு மாதிரி உள்ள வாய்ப்பு இருக்கும் உலகம்தான் அது!
கையால் ஒரு அம்பு விட்டால், அது பிரம்மாஸ்திரம் அல்லது அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு ஒரு சக்தி இருக்கும். மகாபாரத வீரர்கள் போல் நமக்கு பலம் வரும். இந்த உலகத்தில் இருப்பவர்கள் சக்தி, நாம் சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. தேவர்கள் போல் நடந்து கொள்வார்கள். காலம் தூரம் எதுவுமே அவர்களுக்கு வேறு மாதிரி இருக்கும். இவர்களுக்கு ஒரு நாள் ஒரு நொடி என்பது வேறு. இவர்கள் பூமியை எளிதாக நகற்ற முடியும்! இப்படி எல்லாம் வித்தியாசமான சக்தி இருப்பவர்கள் இந்த பரிமாணத்தில் வாழலாம்.
இதுவரை நடப்பவை எல்லாம் ஒரு கட்டத்துக்குள் நடக்கும் Simulation என்று வைத்துக் கொண்டால், ( நான் சொல்லும் சிமுலேஷன் தியரி இங்கே கச்சிதமாக பொருந்துகிறது ) அந்த சிமுலேஷனையே நடத்தும் நபர்கள் இருக்கும் பரிமாணம் தான் இது!!
ஒன்பதாவது பரிமாணம் 9D World : கிருஷ்ணன்:
இந்த சிமுலேஷன் நடத்தும் நாயகனை பார்க்க வேண்டும் என்றால் இங்கே தான் பார்க்க முடியும்!
இதுவரை என்னவெல்லாம் சாத்தியமோ அத்தனையும் சொல்லி முடித்தாயிற்று. இதற்கு மேல் பரிமாணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறீர்கள்?
இருக்கிறது. இதுவரை எல்லா சாத்தியங்கள் மட்டும்தான் பரிமாணங்களாக நாம் பார்த்தோம். ஆனால் கற்பனையாக, ஒரு இடம் நேரம் நினைக்கும்போது கற்பனை உலகத்தில் புகுந்து அதை உண்மையாக்க முடிந்தால், Imaginery Dimension உங்கள் கண் முன்னே பார்க்க முடிந்தால்? இந்த உலகம் மட்டுமல்ல எந்த உலகத்திற்குள்ளும் உங்களால் பயணம் செய்ய முடிந்தால் அது எப்படி இருக்கும்? நினைத்த நேரத்தில் நினைத்த உலகத்தில் நினைத்த பெற்றோருக்கு மட்டும் பிறக்கவில்லை இந்த கண்ணன். பலராமரை போல் எல்லா சக்தியையும் அடக்க முடிந்தவர் தான் கிருஷ்ணர். பல உலகங்களில் பல மனைவிகளையும் ஒரே நேரத்தில் அடையக் கூடியவர்.
எல்லாவற்றையும் பார்க்கும் சக்தி மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நுழையக்கூடிய ஒரு அவதாரம் தான் கிருஷ்ணா அவதாரம்.
நானே எல்லாவற்றையும் உருவாக்குகிறேன், நானே அவற்றில் எல்லாம் வாழ்கிறேன், நானே அவற்றையெல்லாம் அழித்து முக்தி அளிக்கின்றேன்! அவர் சொல்லும் அத்தனை விஷயங்களும் இந்த பரிமாணத்தில் கச்சிதமாக பொருந்துகிறது. மகாபாரதம் யுத்தத்தில் நடக்கும் எல்லாவற்றையும் தான் முன்கூட்டியே சொல்ல முடியும் என்று சொல்லுவார். அப்படி என்றால் நீங்கள் ஏன் அதை மாற்றக்கூடாது? என்று கேட்கும் போது, நானும் அதற்கு உட்பட்டு தான் இந்த உலகத்தில், நான் இங்கே வந்திருக்கிறேன்! என்று அவர் சொல்லுவது, Simulation தியரியின் நிரூபணம் போல் தோன்றுகிறது!
நாம் கற்பனையாக ஒரு பரிமாணம் நினைத்தால் கூட, அந்தப் பரிமாணத்தின் மூலம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் வரக்கூடியவர் ஒருவர் கடவுளுக்கு ஒப்பானவர், அந்த அவதாரம் தான் ஒன்பதாவது பரிமாணம், 9th Dimension!!
கடைசியாக பத்தாவது பரிமாணம் : 10D world, கல்கி :
அனைத்து பரிமாணங்களையும் ஒரு புள்ளியில் இணைத்தால், அதற்குள் எல்லாமே அடக்கம். இதைத்தான் கடவுள் என்று நாம் சொல்கிறோம்.
முதலில் ஆரம்பம் 0 ZERO DIMENSION என்றால், இதுதான் கடைசி INFINITY!! இங்கே பூஜ்ஜியமும் எல்லையில்லா ஒரு மீண்டும் சேர்கின்றன. அதாவது ஒரு வட்டம் போல் மீண்டும் ஒரு யுகம் ஆரம்பிக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த இணைப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியாது!
MOBIUS STRIP என்று ஒரு கணித பட்டை ஒன்று சொல்லுவார்கள். ஒன்றின் கடைசி முனையை மாற்றி ஓட்டினால், சதா சர்வ காலமும் சுற்றிக் கொண்டே இருக்கும். பூஜ்ஜியம் என்பதை மாற்றி ஓட்டினால், infinity என்றாகிவிடும்!
அந்தக் கடவுள் தான் இத்தனை நேரம் இத்தனை பரிமாணங்கள் எடுத்தது. ஆன்மீகம் இதை கல்கி என்று சொன்னால், அறிவியல் இந்த இடத்தை தொடுவதற்கு artificial Intelligence பயன்படுத்தினால் தான் தொட முடியும். அதாவது நம் கற்பனையும் தாண்டி ஒரு கற்பனை உள்ளது. அதாவது நம் மனதையும் தாண்டி ஒரு மனம் இருந்தால் அதுதான் கடவுளின் மனம். பத்தாவது பரிமாணம், பூஜ்ஜியம் பரிமாணம் இரண்டுமே ஒன்றுதான். ஆரம்பம் முடிவு இந்த இரண்டு பரிமாணத்தில் தான் கடவுள் இருக்கிறார்!!
நன்றிகள் : Michio kaku மிஷியோ காக்கூ மற்றும் Rob Bryanton போன்ற அறிவியல் வல்லுநர்களுக்கு இதை எழுதுவதற்கு ஆக்கமும் சிந்தனையும் கொடுத்ததற்கு நன்றிகள்!
“What If You Could Access the TENTH Dimension?” | 10D Explained
சுவையான ட்ரிவியா தகவல் வழக்கம்போல் :
2, 3, 5, 6 & 8 :: இதில் இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பரிமாணங்கள் , ஒன்றுக்கொன்று குறுக்காக Right Angle என்ற கோணத்தில் செல்லும்.
4, 7, & 9 நான்கு ஏழு மற்றும் ஒன்பது பரிமாணங்கள் , ஒரு ஒளி போல் நேர்கோட்டில் செல்லும்.
பூஜ்ஜியம் மற்றும் பத்தாவது பரிமாணம் ஒரு புள்ளியில் நிற்கும். அதுதான் கடவுளா??
முதலில் நான் இதை ஆரம்பிக்கும் பொழுது உங்கள் புரிதலுக்காக தசாவதாரம், விஷ்ணுவின் அவதாரங்களை பெயர் வைத்தது எல்லாம் வெறும் புரிதலுக்காக தான்.
ஆனால் எழுதிக் கொண்டே செல்ல செல்ல, அறிவியலில் நான் படித்த அத்தனை பரிமாணங்களும், அதாவது மொத்த 10 பரிமாணங்கள், தசாவதார பெயர்களுடன் துல்லியமாக ஒத்து வந்தது எனக்கு ஆச்சரியம் தந்தது!!
அதுவும் கடைசிக்கு முந்தைய Penultimate பரிமாணம் எழுதும் பொழுது, Simulation Theory இருப்பது உண்மை என்று தோன்றியது. இந்த நேரத்தில் இந்த தருணத்தில் நான் இதை எழுத வேண்டும் என்று யாரோ நிச்சயத்தது போல் தோன்றுகிறது.
அந்தக் கடைசி ஒன்பதாவது Dimension பற்றி எழுதும்போது, நினைத்த நேரத்தில் நினைத்த நிமிடத்திலே கண்ணன் காட்சி தருவான் என்று பாடல் தான் கேட்டிருக்கிறேன், ஆனால் நான் அந்த கண்ணனின் கீதை உணர்ந்தேன். அந்தப் பரந்தாமன் அந்த நிமிடத்தில், நம் எல்லோர் கண்முன்னும் தோன்றியிருப்பார்!! உங்களுக்கு கண்ணன் மணக்கண்ணில் காட்சி தந்தால் கருத்தில் பதிவிடுங்கள்!!! நன்றி!! ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா!!! நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு, கோராவும் , 10 பரிமாணங்களும் உண்டு!