ஆரோக்கியமாக வாழ தினமும் காலையில் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள் என்னென்ன…

காலை பழக்கம் என்பது நமது ஆரோக்கிய வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது தெரியுமா? எனவே காலையில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் நாம் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். அப்படியாக ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சில பயிற்சிகளை இப்போது பார்ப்போம்.

நாம் கோடைகாலத்தை அதிகபட்சம் கடந்துவிட்டோம். இனி வரும் காலங்கள் நமக்கு குளிரானதாகவே இருக்கும். இந்த காலங்களில் படுக்கையில் இருந்து எழுவதே நமக்கு கடுமையான காரியமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியமான காலை வேளையை உருவாக்கி கொள்பவர்கள் நீண்ட வாழ்வை பெறுகின்றனர். ஆகவே உங்கள் உடல், மனம், தோல் ஆகியவற்றிற்கு நன்மை செய்யும் காலை பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

அப்படி காலை விஷயங்களை ஆரோக்கியமானதாக மாற்றும் 8 பழக்கங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். ஒரு நல்ல வாழ்க்கையை பெறுவதோடு வாழ்க்கையில் தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கவும் இது உதவக்கூடும். எனவே நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை மாற்றமானது உங்கள் கைகளிலேயே உள்ளது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையே நாங்கள் கூற போகிறோம்.

தண்ணீர்

தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். ஆனால் மிகவும் முக்கியமாக நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் உடனடியாக ஒரு கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும். நமது உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தும் தண்ணீரை சார்ந்தே செயல்படுகின்றன.

படுக்கையில் இருந்து எழுந்ததும் உடனே தண்ணீர் குடிப்பது அன்றைய நாள் முழுவதும் நமது உடல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு எடையை குறைக்கவும் உதவுகிறது. எனவே உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் புத்துணர்ச்சியாக இருக்கவும் எப்போதும் உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக்கொள்ளவும்.

ஓட்டம்

தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் செல்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் தசையை வலுப்படுத்துகிறது. மேலும் உங்கள் உடல் வலுவாகவும் வடிவமாகவும் இருக்க இது உதவுகிறது. ஒவ்வொரு நாளும் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஜாக்கிங் செய்வது மாரடைப்பு, இருதய நோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்கள் போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே உங்கள் மொபைல், தண்ணீர் பாட்டில் என அனைத்தையும் வைத்துக்கொள்ளும் பை ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியின் போது அது உங்களுக்கு உதவும்.

​யோகா

மன அழுத்தம், வேலை அழுத்தம் போன்ற மனம் சார்ந்த பல பிரச்சனைகளை சரி செய்ய யோகா உதவுகிறது. சமய ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியாவில் யோகா முறையானது முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. உங்கள் மூளையில் உள்ள எதிர்மறை ஆற்றலையும் நம்பிக்கையையும் வெளியிட தியானம் மற்றும் யோகா உதவுகிறது. இது மனதை இயற்கையோடு இணைத்து அதன் மூலம் உங்கள் உடலையும் ஆன்மாவையும் சிறந்ததாக மாற்றுகிறது. எனவே யோகாவை பெற உங்களுக்கு அருகில் இருக்கும் யோகா மையங்களை அணுகலாம். சூரியனுக்கு முன்பு எழுந்து யோகா செய்ய பழகி கொள்ளுங்கள்.

​எண்ணெய் கொப்பளித்தல்

காலை வேளையில் செய்ய கூடிய முக்கியமான நிகழ்வுகளில் எண்ணெய் கொப்பளித்தலும் ஒன்று ஆகும். நாம் நல்ல இரவு தூக்கத்தை மேற்கொள்ளும் போது நமது வாயில் நச்சுத்தன்மையுடைய பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இந்த பாக்டீரியாக்களை நச்சு தன்மை இழக்க செய்யும் ஆயுர்வேத மவுத்வாஷாக எண்ணெய் உள்ளது. மேலும் இது உங்கள் வாயின் பி.ஹெச் நிலையை சமப்படுத்த உதவுகிறது.

மேலும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது உதவுகிறது. எனவே ஆயில் புல்லிங் எனும் எண்ணெய் கொப்பளிப்பது என்பது உங்கள் வாயிற்கு ஒரு சிறிய பயிற்சியாகவும் இருக்கும்.

நீராவி சிகிச்சை

கொரோனா மற்றும் பிற நோய்களில் இருந்து உங்களை விலக்கி வைப்பதற்கும், முகப்பரு, முகத்தில் இருண்ட வட்டங்கள், கறைகள் மற்றும் தொய்வான சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும் நீராவி சிகிச்சை முறை உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதால் கவலை மற்றும் அமைதியின்மை போன்ற மன ரீதியான பிரச்சனைகளை குறைப்பதற்கு இது உதவுகிறது.

எனவே தினமும் காலையில் இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் காலையிலேயே கவலையற்ற ஒரு ஆரோக்கியமான மன நிலையை பெற முடியும்.

முக மசாஜ்

நமது நாளை துவங்குவதில் முக மசாஜ் முக்கிய பங்களிக்கிறது. நம்மில் எவர் ஒருவரும் அதிகாலை எழுந்த பிறகு முகத்தை கழுவாமல் நமது நாளை துவங்குவது இல்லை. அது தினமும் பல் துலக்குவதை போலவே முக்கியமான காரியமாக உள்ளது. எனவே காலை முகம் கழுவுவது இன்றியமையாத விஷயமாகும்.

எனவே இனி முகம் கழுவுவதுடன் புதிய சேர்க்கையாக முக மசாஜையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்காக முகத்தை மசாஜ் செய்யும் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

சன் ஸ்க்ரீன்

நமது பருவநிலை என்னவாக இருந்தாலும் சன்ஸ்க்ரீன் இல்லாத ஒரு நாள் உங்கள் சருமத்திற்கு மோசமான நாளாகவே இருக்கும். சன்ஸ்க்ரீன் சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளில் இருந்து உங்களை பாதுக்காக்கிறது மற்றும் சருமத்தில் வயதானவுடன் ஏற்படும் சுருக்கங்கள் கோடுகள் போன்ற பிரச்சனைகளையும் இது சரிசெய்ய உதவுகிறது. இது உங்கள் சருமத்தில் ஏற்படும் பருக்களை குறைக்கவும் உதவுகிறது.

ஓட்ஸ்

காலை வேளையில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. எனவே காலையில் நீங்கள் உணவை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு நாளை வழி நடத்துவதற்கான ஆற்றலை காலை உணவு நமக்கு வழங்குகிறது. எனவே ஆரோக்கியமாகவும் சத்தாகவும் இருக்க ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவை பெற வேண்டும்.

சத்தான காலை உணவை தயார் செய்வதற்கான போதிய நேரம் உங்களுக்கு இல்லை எனில் சில பழங்களை வெட்டி அவற்றை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து சாப்பிடலாம். இது மிகுந்த ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவாகும்.

எனவே இந்த வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம் வளமையான நாள் துவக்கத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் நீங்கள் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *