ஏழு சிறுதானியங்களும், எக்கச்சக்கமான பலன்களும்!

நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பர்ய உணவுகள் தான். இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. அந்தவகையில் ஏழு சிறு தானியங்களும் அவற்றில் ஒளிந்துள்ள எக்கச்சக்க பலன்களும் குறிந்து இப்போது பார்க்கலாம்.

இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம் என்று ஆகிவிட்டது. அதற்கு நமக்கு உற்றதுணையாக இருப்பவை சிறுதானியங்கள். நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பர்ய உணவு வகைகளே. ஆனால் சென்ற தலைமுறையில் நம் உணவு முறையிலும், உணவுப் பொருட்களிலும் ஏற்பட்ட மாற்றம், நமது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் சுருக்கிவிட்டது. எதிர்காலத் தலைமுறையினருக்காகவாவது இயற்கை விவசாயத்தையும் நம் பாரம்பர்ய உணவுமுறையையும் மீட்டெடுக்கவேண்டிய தருணம் இது. ஏழு சிறு தானியங்கள், அவை தரும் எக்கச்சக்க பலன்கள்… 

சிறுதானியங்கள்

தானியங்களில் சிறுவிதைகளைக் கொண்ட கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவையே சிறுதானியங்கள். மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்டவை; மனிதர்களைப் பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்கொண்டவை.

Millet

தினை

Foxtail millet 

நம் நாட்டின் சிறுதானியங்களில் மிகவும் பழைமையானது தினை. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளாக கிழக்கு ஆசியாவில் பயிரிடப்பட்டு வந்த தானியம். இதன் உற்பத்தியில் இந்தியாவுக்கே முதல் இடம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக்கொண்டது. இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தினையைக் கூழாக்கித் தருவார்கள்; அது, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இது கபம் தொடர்பான நோய்களை நீக்கும். வாயுத்தொல்லையை விரட்டும். தினையில் இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம் ஆகியவற்றைச் செய்யலாம். பிரமாதப் பலன்களைத் தரும் தினையில் உருவான பலகாரங்கள் நம் உடல்நலம் காக்கும்.

கேழ்வரகு / ராகி

குழந்தைகளாகட்டும்… பெரியவர்களாகட்டும் அனைவருக்கும் ஏற்றது கேழ்வரகு. ஏழைகளின் உணவாக முன்னொரு காலத்தில் இருந்தது, இன்று பலருக்கு உயிர் காக்கும் உணவாக மாறிவிட்டது. வெப்பமான பகுதிகளிலும் விளையும் தன்மைகொண்டது. அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ராகியைக் களியாகச் செய்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; குடற்புண்கள் குணமாகும்; பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமுமே சாப்பிட்டுவரலாம். கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதில், இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியாப்பம், அடை, இனிப்பு வகைகள் என பலவற்றைச் செய்யலாம். 

Finger millet

சாமை

Panicum sumatrense

சாமையில் அரிசியைவிடப் பலமடங்கு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மற்ற சிறுதானியங்களைவிட சாமையில் இரும்புச்சத்து அதிகம். இது, ரத்தசோகையை நீக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். சாமையில் உள்ள தாதுஉப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில், இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.

குதிரைவாலி

Echinochloa frumentacea

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சுவை மிகுந்த குதிரைவாலி, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவக்கூடியது. இது வானம் பார்த்த மானாவாரி நிலங்களிலும் விளையக்கூடியது. இதன் கதிர் குதிரையின் வால் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் இதற்கு `குதிரைவாலி’ என்ற பெயர்க் காரணம் ஏற்பட்டது. இதில், இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். இடுப்புவலி, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் போன்ற நேரங்களில் குதிரைவாலி களி, குதிரைவாலி கஞ்சி சிறந்த உணவாக இருக்கும்..

வரகு

தமிழர்களின் அடிப்படை உணவாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்தது வரகு. பல நாடுகளின் பாரம்பர்ய உணவு. வறட்சியான நிலத்தில்கூட விளையும் ஆற்றல்கொண்டது. உடலுக்கு அதிகச் சக்தியளிக்கும். அரிசி, கோதுமையைவிட இதில் நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன. சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம். இதில் புட்டு, வெண்பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாகச் செய்ய முடியும். 

Proso millet

கம்பு

Pearl millet

இந்தியா முழுக்கப் பயிர் செய்யப்படும் தானிய வகை. வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும்; அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்றுப் புண் வராமல் தவிர்க்கும். வளரும் குழந்தைகளுக்கும் பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் சிறுநீரைப் பெருக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

சோளம் 

Sorghum

இந்தியாவில் பஞ்ச காலத்தில், மக்கள் பசியை அதிகம் போக்க உதவிய தானியம் இது. நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல. சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. சிறுநீரைப் பெருக்கும்; உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். இதில் உள்ள பீட்டாகரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம். 

சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளைத் தயாரிக்கலாம். நோயற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வோம். நமது பாரம்பர்யத்தைப் போற்றி வளர்ப்போம்.