தமிழில் சுதந்திர தின உரை / independence day speech

ஆகஸ்ட் 15 – இது ஒரு சாதாரண நாள் அன்று. பலபேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து நமக்காக சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஒரு புனித நாள். ஜாதி மத பேதங்களை கடந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுதந்திர காற்றை கர்வத்தோடு சுவாசிக்க துவங்கிய நாள். நாம் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு நம் முன்னோர்கள் நம் நலனுக்காக எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர், சிறைச்சாலைகளிலும், போராட்டக்களங்களிலும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை எண்ணி அவர்களுக்கான நன்றியை கூறும் நாள்.

தேசிய கொடியை கம்பத்தில் உயர பறக்கவிடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய சிந்தனைகளும், எண்ணங்களும் நம் தேசியக்கொடியை போல எப்போதும் உயர்ந்து பிறந்திருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் ஒரு நன்னாளாக இந்நாள் இருக்கிறது.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று சொன்னார் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை கேட்டு நாம் மெய் சிரிக்கலாம். ஆனால் அவர் கூறிய அந்த யுத்தத்தில் ஒரு பக்கத்தில் இருந்தவர்கள் மட்டுமே கத்தியின்றி இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எதிர் திசையில் இருந்தவன் பீரங்கிகளோடு முன்னேறிய அதே வேலையில், எதை பற்றியும் கவலைப்படாமல் தன் நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காவும் போராடிய நம் முன்னோர்களை நாம் கட்டாயம் நினைக்க வேண்டும். அதே சமயம் அவர்கள் அப்படி போராடி பெற்று தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஏழு வயதிலே எழுத்தாணியை பிடித்து கவி எழுத துவங்கிய எட்டையபுரத்தான் தன் வாழ்நாளின் பெரும்பங்கை சுதந்திர போராட்டத்திற்காகவே தியாகம் செய்தான். அவனுக்கென்ன தலையெழுத்தா? நம் தலை எழுத்தை மாற்றவே அவன் அன்று வதைபட்டான் என்பதை நாம் உணரவேண்டும்.

உப்பை உண்டால் தானே சுரணை இருக்கும் என்று கருதியோ என்னவோ, உப்பிற்கு அதிகப்படியான வரியை விதித்தனர் ஆங்கிலேயர். அந்த உப்பு வரியை விளக்குவதற்காக போரடியவர்களில் கிட்டத்தட்ட 80,000 பேர் சிறைவாசம் சென்றனர். அப்படி அன்று அவர்கள் துன்பப்பட்டதெல்லாம் யாருக்காக? அவர்களுக்காகவா? இல்லை, நமக்காகவும் நமக்கு பிறகு வரும் தலைமுறைக்காகவும் தான்.

மகாத்மா காந்தியும் சுதந்திர போராட்டமும்:

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய பெருமை மகாத்மா காந்தியை சாரும். இவர் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவியதோடு மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளுக்கும் அது ஒரு வழிகாட்டியாக இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இவர் 1924 ஆம் ஆண்டு பொறுப்பேற்றபின்னர், சுதந்திர போராட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன என்றால் அது மிகையாகாது. இவர் சுதந்திரத்திற்காக மட்டும் அல்லாமல் மது ஒழிப்பு, தீண்டாமை, சமூக நீதி இப்படி பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து அதற்காக போராடியுள்ளார், ஏராளமான நாட்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 21 நாட்கள் வரை இவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

வ. உ. சியும் சுதந்திர போராட்டமும்

வணிகம் மூலம்தான் ஆங்கிலேயர் நம் நாட்டிற்குள் வந்தனர் என்பது நாம் அறிந்ததே. பிறகு அவர்கள் தங்கள் வணிகத்தை விஸ்தரித்ததோடு நம்மையும் அடிமை படுத்த துவங்கினர். மிக சிறந்த வழக்கறிஞ்சரான வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆங்கிலேயரின் அஸ்திவாரமான அவர்கள் வணிகத்திலேயே கை வைக்க துவங்கினார். 1906-ஆம் ஆண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்த அவர் பல பேரின் உதிவியோடு கப்பலை வாங்கி அதை இந்தியா, இலங்கை இடையே பயணிக்க செய்தார். இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் கப்பலை புறக்கணித்து வ. உ. சியின் கப்பலில் பயணிக்க துவங்கினர்.

எப்படியாவது சுதேசி நாவாய்ச் சங்கத்தின் கப்பலை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்ட ஆங்கிலேயர்கள், தங்கள் கப்பல்களில் இலவச பயண திட்டத்தை அறிவித்தனர். ஆனால் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை உணர்ந்த மக்கள் தொடர்ந்து வ. உ. சியின் கப்பலிலேயே பயணித்தனர். ஒரு கட்டத்தில், மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ. உ. சி திருப்பிவிடுகிறார் என்று குற்றம் சாட்டி வ. உ. சி சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு அது 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. வ. உ. சி விடுதலை ஆன சமயத்தில் சுதந்திரபோராட்டத்தின் நிலை முற்றிலும் மாறி இருந்தது. அகிம்சை வழியை அவர் விரும்பவில்லை. அதே சமயம் அகிம்சை வழியை எதிர்த்தால் சுதந்திர போராட்டத்தில் குழப்பம் வரும் என்று எண்ணிய அவர், சுதந்திர போராட்டத்தில் இருந்து தன்னை சற்று விலகிக்கொண்டார்.

ஒண்டிவீரன்:

அகிம்சை வழியில் போராடியது ஒரு பக்கம் இருந்தாலும், வீரத்தோடும், போர் யுக்திகளோடும் ஆங்கிலேயர்களை நேருக்கு நேர் எதிர்த்த போராளிகளும் நம் தேசத்தில் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் ஒண்டிவீரன். அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரின் படைத்தளபதியாக இருந்தவர் தான் ஒண்டிவீரன். இவருடைய இயற்பெயர் பூலித்தேவன். ஒரு முறை இவர் தனி ஒரு ஆளாக(ஒண்டியாக) சென்று ஆங்கிலேயர் படையை சின்னாபின்னம் செய்தார். அதில் இருந்து இவரை அனைவரும் ஒண்டிவீரன் என்று அழைக்க துவங்கினர்.

மருது பாண்டியர்:

1785 முதல் 1801 வரை சிவகங்கை சீமையில் ஆங்கிலேய அரசுக்கு பெரும் சவாலாக இருந்த மிக முக்கிய வீரர்களாக மருது சகோதரர்கள் இருந்தனர். பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் இவர்கள் ஆயுதம் தாங்கி அன்னியகர்களை விரட்ட முற்பட்டனர். மருது பாண்டியர் என்று அழைக்கப்படும் இவர்கள், இவர்களை போல ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆங்காங்கே போராடிய குழுக்களை எல்லாம் இன்றிணைத்து மிகப்பெரிய ஒரு குழுவாக்க முற்பட்டனர். ஆனால் துரதிஷ வசத்தால் இவர்கள் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டு மாண்டனர்.