பிராய்லர் கோழி உடல்நலனுக்கு நல்லதா? உண்மை என்ன| broiler chicken good for health in tamil

அரை வேக்காட்டு உணவுகள் பலவீனமான உடலை மேலும் பலவீனமாக்கும் என்னும் போது, விஸ்வரூப வளர்ச்சியாய் வேகமாக வளரும் உணவுகள் பலவும் இரசாயனங்களின் உதவியுடன் பெருமளவு வளர்ச்சியடைகிறது. உணவு பொருள்களோடு அதில் இறைச்சி வகைகளையும் சேர்க்கலாம். முறையாக தரத்தோடு வெளிவரும் பொருள்களுக்கு மத்தியில் கலப்பட உணவுகளும் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

கடந்த 10 வருடங்களாகவே பிராய்லர் கோழிகளை தொடர்ந்து சாப்பிடலாமா என்னும் கேள்வி பலருக்கும் உண்டு. புரதம் நிறைந்தது கோழி இறைச்சி என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் அதை வளர்க்கும் முறையிலும் பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டும். இல்லயெனில் அவை உடலுக்கு நன்மை செய்வதில் குறைகள் உண்டாகலாம்.

சிக்கன் ரெஸிபிகள் விதவிதமாய் நாவின் சுவையை பன்மடங்கு பெருக்குவதிலும் குறையில்லை.

இளம் வயதில் பெண் குழந்தைகள் பூப்படைந்து வருவதற்கு காரணங்களாக உணவு முறையும் சொல்லப்படுகிறது. அத்தகைய உணவு வகைகளில் உரிய முறையில் வளர்க்கப்படாத கோழி இறைச்சியும் ஒரு காரணம்.

உலகம் முழுக்க அசைவ பிரியர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள். சுத்தமான அசைவம் என்று தங் களை அறிமுகப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அதே போன்று அன்றாடம் இறைச்சி வகைகளை அதிகம் எடுத்துகொள்பவர்களில் பலராலும் ஆரோக்கியமாக திடகாத்திரமா கத் தான் இருக்கிறோம் என்று சொல்ல முடிவதில்லை.

அதிகரித்து வரும் கால்சியம் குறைபாடு காரணம் அறிவோமா?

மூலிகை தாவரத்தையும், மருந்து இலைகளையும் தின்று வளர்ந்த ஆடுகள் இன்று சத்தில்லாமல் சக்கையை உண்டு கொழுத்திருக்கின்றன. இதற்கு சற்றும் சளைக்காமல் தானியங்களைத் தின்று மட்டுமே வளர்ந்த கோழிகள் சில குப்பை மேட்டில் மேய்ந்திருந்தாலும் சில கோழிகள் வீட்டுப்பராமரிப்பில் திடகாத்திரமாக இருக்கின்றன எனினும் இவற்றை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டியதாயிருக்கிறது.

இந்நிலையில் பிராய்லர் கோழி எனப்படும் கோழி இறைச்சிக்கு அசைவப் பிரியர்கள் அனைவருமே அடிமையாகிக் கிடக்கிறார்கள். சமீப காலங்களாக மருத்துவர்கள் இராசயனங்கள் கலக்கப்பட்டு விளையும் உணவு பொருள்களை போன்று, கால் நடை வளர்ப்பிலும் வீரியம் கலந்த ஆன்டி பயாடிக் மருந்துகள் சேர்க்கப்படும் இறைச்சி வகைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இந்நிலையில் உண்ணும் இறைச்சியின் வளர்ப்பில் உரிய கவனிப்பும், சரியான அளவில் ஆன் டி பயாடிக் மருந்துகளும் மட்டுமே பயன்படுத்தி இருப்பதை கண்டறிவதில் நிச்சயம் சிரமம் இருக்கவே செய்யும். சிறந்த கோழி பண்ணைகள் அரசு விதித்திருக்கும் நடைமுறைகளை பின்பற்றினாலும் இதிலும் சிலர் விதிமுறைகளை மீறுவதை தவிர்க்க இயலுவதில்லை.

ஒருபுறம் அசைவம் உடலுக்கு சேரவேண்டும். அதிலும் புரதம் நிறைந்த கோழி இறைச்சி அவசியம் தேவை என்பதும் மறுக்கமுடியாது. அதே நேரம் உண்ணும் கோழி உரிய முறையில் வளர்க்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

சுவையைக் கூட்டும் விதமாய் தயாரிப்பு

அசைவப் பிரியர்களில் அதிகமானோர் கோழி இறைச்சியை விரும்ப காரணம் இதன் சுவைதான். எலும்புகள் இல்லாமல் மிருதுவான இந்த இறைச்சியை குழந்தைகளும் . விரும்பி சாப்பிடுகிறார்கள்

சிக்கன் 65, சில்லிசிக்கன், பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், பெப்பர் சிக்கன், மஞ்சூரியன், நாட்டிசிக்கன், சிக்கன் ரோல், சிக்கன் க்ரேவி, கபாப் சிக்கன், சிக்கன் வறுவல், சிக்கன் பராத்தா, க்ரிஸ்பி சிக்கன், ஸ்பிரிங் சிக்கன், கார்லி சிக்கன், சிக்கன் லாலிபாப், சிக்கன் டிக்கா இன்னும் இன்னும் விதவிதமான வகைகளில் ருசிக்க ருசிக்க திகட்ட திகட்ட வித்தியாசமான சுவைகளில் உமிழ்நீர் சுரக்க சுரக்க சப்புக்கொட்டி சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் இதை நாடுவதற்கு காரணமும் கோழி இறைச்சியின் அலாதியான சுவைதான்.

இறைச்சியின் தன்மை வளர்ப்பு ஒருபுறம் இருக்கட்டும். அதே நேரம் எண்ணெயில் பொறித்து கலர் கலராய் வண்ணம் சேர்த்து, செயற்கை சுவையூட்டிகளும், காரமிக்க அதீத மசாலாக்களும் சேர்த்த இவை நிச்சயம் உடலுக்கு நல்லதை மட்டுமே தரும் என்பதும் கேள்விக்குறி தான்.

நாட்டுக்கோழியும் பிராய்லர் கோழியும்

நாட்டுக்கோழிகள் இயற்கை உணவுகளும் தானியங்களும் கொண்டு வளர்க்கப்படுகிறது. இதில் புரதசத்து நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்புசக்தியையும் தருகிறது. நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.

நாட்டுக்கோழி அளவுக்கு பெருத்த நன்மைகளை பிராய்லர் கோழியிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் அதன் வளர்ப்பிலும் குறை நேராமல் இருக்க வேண்டும்.

பிராய்லர் கோழி உரிய காலத்தில் உரிய இடைவேளை வரையான வளர்ச்சியை அதற்கு தகுந்த ஆகாரத்தின் மூலமே பெற வேண்டும். அதோடு பிராய்லர் கோழிக்கு தீவனம் இடுவதிலும் இந்திய உணவு தர நிர்ணயம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மட்டுமே ஆன் டி பயாடிக் சேர்க்கை இருக்க வேண்டும். இப்படி வளர்ந்து விற்பனைக்கு வரும் கோழி இறைச்சியில் கேடு இருக்காது.

எப்படிச் சாப்பிடுவது தெரியுமா?

பிராய்லர் கோழி என்று குறிப்பிட்டு சொல்லாமல் அசைவ உணவுகள் பெருமளவு தொடர்ந்து எடுக்கும் போது அவை உடலில் கொழுப்புகளாக சேரும். அதிலும் எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடுபவர்களுக்கு கூடுதலாகவே உடலில் கொழுப்பு சேர வாய்ப்புண்டு.

உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளத்தில் நுழைந்து கொழுப்பை தேக்கி வைக்கி றது.

இவை அடைப்பை உருவாக்கும் போது இரத்த அழுத்தம், இரத்தத்தில் மிகுதியான கெட்ட கொழுப்பு சேர்கிறது.

விரைவில் பூப்படையும் பெண்குழந்தைகள் சிக்கன் மொறு மொறுவென்று சுவைக்கூட்டி தயாரிக்கப்படும் மிருதுவான சிக்கனின் ருசியில் மயங்கி கிடக்கிறார்கள் பெண் குழந்தைகள். போதிய உடல் உழைப்பு இல்லாமல் இறைச்சியின் மீது (உணவின் மீது) ஆர்வமாக கிடக்கும் பிள்ளைகள் விரைவில் உடல் பருமனையும் சந்திக்கிறார்கள்.

இந்த அதீத உடல்பருமனால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் விரைவிலேயே பூப்படையும் நிலையை அடை கிறார்கள். அதாவது 8 வயது நிரம்பாத பெண்குழந்தைகளும் குழந்தை பருவத்திலேயே பூப்படைகிறார்கள்.

அதன் பிறகு மாதவிடாயிலும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க கோழி இறைச்சியே காரணம் இல்லை என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணமே என்று சொல்லலாம்.

பிராய்லர் கோழி இறைச்சி குறித்து

பரிமளா தேவி குமாரசாமி MSc.,(UK). MSc.,

பதிவு பெற்ற உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் (UK)

சர்க்கரை நோய் கல்வியாளர் (UK)

21 ஆம் நூற்றாண்டில் சுகாதார வளர்ச்சியில் மிகப்பெரும் சவாலாக பெரும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பிரச்சனைகளாக சொல்லப்படுவது ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு (AMR) ஒன்றாகும்.

முதலில் ஆன்டி பயாடிக் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். மனிதர்களிடமும், விலங்குகளிடமும் பாக்டீரியாவில் தொற்று நோய்கள் உண்டாகும் போது இதை தடுக்க உதவுவதே ஆன்டி பயாடிக் என்று சொல்கிறோம். இந்த ஆன்டி பயாடிக் நுண்ணுயிர் எதிர்ப்புகளின் அதிகப்படியான பயன்பாடானது ஆன்டி பயாடிக் எதிர்ப்பு என்று அழைக்கப்படும் ஆன்டி பயாடிக் செயல்திறனை குறைத்துள்ளது.

அந்தவகையில்கடந்த 50 வருடங்களாகவே கோழி வளர்ப்பில் ஆன்டி பயாடிக் நோய்த்தொற்றுகள் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், கோழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் , பண்ணை விலங்குகளின் உற்பத்தியை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாகவே உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் ஆன்டி பயாடிக் நுண்ணுயிர் எதிர்ப்புகள் 3 விதமான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகளுக்கு தொற்று நோய் உண்டானதற்கான அறிகுறிகளை காண்பிக்கும் போது, இரண்டாவது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான விலங்குகளின் குழுவிற்கு சிகிச்சை அளிக்கவும், நோய் பரவலை குறைக்கவும், தொற்று நோய் ஆபத்தில் இருக்கும் போது இதை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இறுதியாக விலங்குகளின் எடையை அதிகரிக்க வளர்ச்சி ஊக்குவிப்பாளராக பயன்படுத்தப்படுகிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் கோழி வளர்ப்பில் ஏராளமான ஆன்டி மைக்ரோபையல்களை பரவலாகவே பயன்படுத்தி வருகிறார்கள். கோழி மற்றும் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த ஆன்டி பயாடிக் 1910 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதன் முதலில் அமெரிக்காவில் இறைச்சி பற்றாக்குறை ஒப்பீட்டின் போது மலிவான விலையில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு (நுண்ணுயிர் எதிர்ப்பி) ஆன்டி பயாடிக் பயன்படுத்தினார்கள். கண்மூடித்தனமான ஆன்டி பயாடிக் பயன்பாடு ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பின் விரைவான அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்லலாம். இதனால் ஆன்டி மைக்ரோபியல் பயன்பாட்டை தடைசெய்வதில் பெரிய முயற்சியை மேற்கொண்ட நாடில் முதன்மையானது ஸ்வீடன். இதைத் தொடர்ந்து டென்மார்க், யுனைடெட் கிங்டம் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அடங்கும். இந்த மைக்ரோ பையல்களில் 60% அதிகமானவை கோழி உட்பட கால்நடை உற்பத்தியில் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டது இங்கு கவனிக்க வேண்டியது.

2014 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) நாட்டில் கோழிப்பண்ணையில் ஆன்டி பயாடிக் எதிர்ப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறியதும் கவனிக்க வேண்டும். இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சுற்றியுள்ள பண்ணை கோழிகளில் கணிசமான அளவு ஆன்டி பயாடிக் எச்சங்கள் இருப்பதும், அருகில் இருந்த பண்ணைகளில் மல்டிட்ரக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டது.

கோழி குப்பை மற்றும் கோழி குப்பை அடிப்படையிலான கரிம உரங்கள் பெரும்பாலும் விவசாயத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டு வட இந்தியாவில் கோழி உற்பத்தி செய்யும் மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்து அங்கிருக்கும் 12 கோழி பண்ணைகளிலுள்ள குப்பை மற்றும் மண்ணின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

ஆய்வில் 100% ஈகோலி, 92% கே.நிமோனியா மற்றும் 78% எஸ்.லெண்டஸ் தனிமைப்படுத்தப்பட்டவை மல்டிட்ரக் எதிர்ப்புத்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குப்பை மற்றும் அண்டை பண்ணைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஈ.கோலியில் எதிர்ப்பின் வடிவத்தில் ஒரு வலுவான ஒற்றுமை இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோழிப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மல்டிட்ரக் எதிர்ப்பு ஈ கோலை குப்பை மூலம் சுற்றுச்சூழலுக்குள் நுழைவதை காட்டுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கொலிஸ்டின் என்னும் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் உணவு மாதிரிகள், இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், பழங்கள் காய்கறிகளில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மூல உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன. மொத்தம் 110 மாதிரிகளில் 46.4% கொலிஸ்டின் எதிர்ப்பு உயிரினங்களை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் உணவு விலங்கு உற்பத்தியில் கொலிஸ்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த எதிர்ப்பு பாக்டீரியாக்கள் கோழி பண்ணையில், அங்கிருக்கும் காற்று, இறைச்சி, பண்ணை தொழிலாளர்கள் என அனைவரிடமும் கலக்கிறது. பிறகு அவர்கள் மலம் கழிக்கும் போது அதில் மொய்க்கும் ஈக்கள் அதை தூரமான இடங்களுக்கு பரப்புகிறது என்று ஆன்டி பயாடிக் எதிர்ப்பு குறித்த உலகளாவிய நிபுணர் திமோதி வால்ஸ் கூறியுள்ளார். மேலும் இந்த மருந்து தீவிரமான நோய்வாய்ப்பாட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோழிகளுக்கு உணவளிக்க செய்யகூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.

உலகின் மிக ஆபத்தான சூப்பர் பாக்டீரியாக்கள் சிலவற்றின் பரவலைத் தடுக்க பண்ணைகளின் கடைசி நம்பிக்கையான ஆன்டி பயாடிக் ஆன கொலிஸ்டினை பயன்படுத்துவதை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கும் மேல் நீடித்தால் அதை குறைக்க இந்த வைட்டமின் உணவுகள் உதவுமாம்!

உடலில் நோய் கண்டறிந்து ஆரம்பத்தில் ஆன்டி- பயாடிக் கொடுத்தால் தீவிர பாதிப்பை உண்டாக்கும் நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்திவிடும். ஆனால் சமீப வருடங்களாக இதில் தொய்வு உண்டாகியுள்ளது. உதாரணத்துக்கு 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் புதிதாக டிபி (காச நோய் ) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2.15 மில்லியன் என்று கணக்கிடப்பட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

ஏனெனில் தொற்று நேரும் போது ஆன்டி பயாடிக் மாத்திரைகள் தந்தாலும் அவை குறிப்பிட்ட நேரத்துக்குள் நோயை கட்டுப்படுத்தவோ தவிர்த்துவிடவோ முடியாமல் அதன் வளர்ச்சியை பெருக்கி நோயை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

இப்பொது இந்தியாவில் காசநோயின் மிகவும் ஆபத்தான வடிவம் முற்றிலும் மருந்து எதிர்ப்பு காசநோய் ஆகும்.

ஹைதராபாத்தில் பிராய்லர் கோழிகளை கொண்டு நடத்திய ஆய்வில் பல்வேறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கின்றன என்பதைக் கண்டறிந்தன. இத்தகைய எதிர்ப்பு பிழைகளை கொண்டிருக்கும் விலங்கு உணவை எடுத்துகொள்வது காசநோய் சிகிச்சைக்கு தடையாகவே இருக்கும்.

இவற்றை கருத்தில் கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றூம் தர ஆணையம் Food Safety and Standards Authority of India FSSAI) கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, பால்வளம், கோழி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய உணவு பொருள்களில் ஆன்டி பயாடிக் அளவுகளை வரையறுத்துள்ளது.

இது ஒட்டுமொத்தமாக கோழி பண்ணை வைத்திருக்கும் அனைவர் மீதான குற்றச்சாட்டு இல்லை எனினும் சிலர் கோழி வளர்ப்பில் தீவனத்தில் இந்த ஆன்டி- பயாடிக் மருந்துகளை கொடுக்கப்பட்டிருக்கும் அளவை காட்டிலும் கூடுதலாக தருவதற்கு வாய்ப்பும் உண்டு. இதுகுறித்து இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டால் நாட்டின் பிற பகுதிகளில் எதிர்க்கும் நோய்க்கிருமிகள் உருவாவது நிச்சயம் கண்டறியபடும்.

ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பின் சுமையை ஒரு பனிப்பாறையின் முனை உடன் ஒப்பிட்டு சொல்லலாம். போதுமான கண்காணிப்பும், தரவும் இல்லாததால் ஒரு பெரிய நீரில் மூழ்கிய பகுதி இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது.

மாதவிடாயில் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய 6 உணவுகள், அனைத்து பெண்களுக்கும் !

benefits of chicken, பிராய்லர் கோழி உடல்நலனுக்கு நல்லதா? உண்மை என்ன,  மருத்துவர் விளக்கம்! - effects and causes of eating broiler chicken -  Samayam Tamil

இறுதியாக ஒன்று கோழியில் மட்டும் தான் இந்த பிரச்சனையா என்று கேட்கலாம். இல்லை மண்ணிலும் படிந்து காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி என்று அனைத்திலும் ஆன்டி பயாடிக் நீக்கமற நிறைந்துள்ளது.

அப்படியெனில் ஒவ்வொரு உணவையும் சரியாக இருக்கா என்று பரிசோதனை செய்து சாப்பிடமுடியுமா அதுவும் குடிக்கும் நீர் முதல் என்று கேட்கலாம்.

அதனால் தான் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வேண்டாம் என்று சொல்வதற்கேற்ப அனைவரும் இணைந்து அவை அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்துவதை கடமையாக கொள்ள வேண்டும்.

அதற்கு மாற்றாக தான் உலகம் முழுக்க இயற்கை விவசாயம், மூலிகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பல்வேறு தாவரங்கள், மூலிகைகள் மற்றும் இயற்கை உரம் என்று முன்னோர்கள் கால ஆரோக்கிய வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள் பெருமளவு மக்கள். இதுகுறித்த விழிப்புணர்வு நோக்கி அரசும் கை கோர்த்திருக்கிறது.

இனி எதை சாப்பிடுவதாக இருந்தாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள் என்று சொல்லிவிட ஆசைதான். ஆனால் அதற்கான சாத்தியங்களை முழுமையாக பெற இன்னும் ஒரு தலைமுறை ஆகும் என்றாலும் மக்கள் பெருமளவு இயற்கையை நாடத்தொடங்கிவிட்டதால் இனி வரும் காலம் ஆரோக்கியமாகவே அனைவருக்கும் இருக்கும் என்று நம்புவோம்.

இன்று இதை செய்யாவிட்டால் நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாத உலகில் அவர்கள் வாழ்வதே கடினமாக இருக்கும். உதாரணத்துக்கு சாதாரண சளி காய்ச்சலுக்கு கூட அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும்.