தமிழ் பழமொழிகள்

1) பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.

பொருள்:

சாப்பிடுவதற்க்கு நம் கை முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும். இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்ற பழமொழியின் அர்த்தம்.

2) சோறு கண்ட இடம் சொர்க்கம்.

பொருள்:

இந்த பழமொழியானது தற்காலத்தில் உழைக்காமல் சாப்பிடுபவர்களை கேலி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யாதெனில், ஐப்பசி பௌர்ணமியில் சிவன் கோவில்களில் பச்சரிசி சாதத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். அதை காண்பவருக்கு சொர்கம் கிட்டும் என்பதே இதன் பொருள்.

3) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

பொருள்:

தற்காலத்தில் இந்த பழமொழி, 5 பெண்பிள்ளைகளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பதை உணர்த்தும் வகையில் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யார்தெனில், ஆடம்பரமான தாய், பொறுப்பற்ற தந்தை, ஒழுக்கமற்ற மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறந்தார், சொல்பேச்சு கேளாத பிள்ளை. இவை ஐந்தையும் பெற்றால் எப்படிப்பட்ட செல்வந்தனும் ஆண்டி ஆவான் என்பதே இதன் பொருள்.

4) நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

பொருள்:

நல்ல மாட்டிற்கு ஒரு சுவடு என்பதே உண்மையான பழமொழி. இதில் சுவடு என்ற வார்த்தை மருவி சூடு ஆகி விட்டது. சுவடு என்றால் கால் தடம் என்று பொருள். அந்த காலத்தில் சந்தையில் மாடு வாங்கும்பொழுது எந்த மாட்டின் கால் தடம் நன்றாக இருக்கிறதோ அதுவே பலம் பொருந்திய மாடு என்பதை அறிந்து அதை வாங்குவது வழக்கம்.

5) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள்:

இதன் உண்மையான பழமொழி, “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” அதாவது கழு என்பது ஒருவகை கோரைப்புல்லாகும். இந்த வகை புல்லை கொண்டு பாய் தைத்து படுத்தால் அந்த பாயில் கற்பூர வாசனை வீசுமாம்.

6) அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல

பொருள்:

உண்மையான பழமொழி என்னவென்றால் “அரசினை நம்பி புருசனை கைவிட்டது போல” என்பதே. அதாவது அந்த காலத்தில் பெண்கள் பிள்ளை பேரு வேண்டி அரச மரத்தினை சுற்றுவது வழக்கம். அப்படி அரச மரத்தினை மட்டும் சுற்றிவிட்டு புருசனை கவனிக்காமல் விட்டால் பிள்ளை எப்படி பிறக்கும் என்பதை கூறுவதற்காக சொல்லப்படுவதே இந்த பழமொழி.

7) ஆயிரம் பேரை கொன்றவன் அரைவைத்தியன் ஆவான்.

பொருள்:

உண்மையான பழமொழி – “ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்”. ஆதாவது 1000 வேர்களை கொண்டு நோய்க்கு மருந்து தயாரித்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான் என்பதே இந்த பழமொழியின் பொருள்.

8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

பொருள்:

அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

9) நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.

பொருள்:

பொதுவாக நண்டிற்கு தேவையான உணவு கிடைத்துவிட்டது என்றால் அவற்றை அது உண்டு நல்ல பலம் பெற்ற பிறகு இணைசேர்க்கைக்காக எதிர்பாலினத்தை தேடி வெளியில் வரும். அப்போது தான் பெரும்பாலும் அவை மற்ற பெரிய விலங்குகளிடம் சிக்கி மாண்டு போகும். இந்த பழமொயை பெரும்பாலும் வீண்வம்பில் ஈடுபடுபவர்களை நோக்கி கூறும் ஒன்றாக தற்காலத்தில் வழக்கில் உள்ளது.

10) ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

பொருள்:

ஒரு குடும்பத்தில் நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் அந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணின் கையில் தான் உள்ளது.

11) இருகினால் களி இளகினால் கூழ்

பொருள்:

எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.

12) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

பொருள்:

என்னதான் பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தன் ஆனாலும் அவனிடம் படிப்பு இல்லை என்றால் அவனிடம் ஞானம் இருக்காது என்பதே பொருள்.

13) ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

பொருள்:

தாசில் என்ற வார்த்தையும் பொருள் அதிகாரம். எந்த ஒரு விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த ஆசைப்டுவதற்கு முன்பாக அதற்கான உழைப்பை போடவேண்டும். அதிஷ்டத்தை நம்பி இருந்தால் எதுவும் ஆகாது என்பதே இதன் பொருள்.

14) இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை

பொருள்:

பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.

15) செக்கை வளைய வரும் எருதுகள் போல

பொருள்:

செக்கு மாடு எப்படி ஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.

16) சேர இருந்தால் செடியும் பகை

பொருள்:

எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

17) தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு

பொருள்:

பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்.

18) துணை போனாலும் பிணை போகாதே

பொருள்:

பிறருக்கு துணையாக இருப்பது நல்ல விடயம் என்றாலும் அதற்காக பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது. உதரணமாக சொல்ல வேண்டும் என்றால்: யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் என்று சொல்லுவார்கள் அல்லவா அது போல.

19) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

பொருள்:

கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்(காரம்) என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை என எண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் அதனால் பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.

20) கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்

பொருள்:

தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.

21) உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

பொருள்:

உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.

22) ஊதாரிக்கு பொன்னும் துரும்பு

பொருள்:

சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.

23) ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

பொருள்:

ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.

24) ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

பொருள்:

பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

25) கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்

பொருள்:

வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை ‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.