வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் முதல் முறையாக கதையின் நாயகனாக சூரி நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் விடுதலை 1.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
வெற்றிமாறனின் இயக்கம், சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருப்பது, விஜய் சேதுபதி கதாபாத்திரம் என்ன? இளையராஜாவின் இசை என விடுதலை 1 படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அத்தகைய எதிர்பார்ப்பை விடுதலை திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் இடத்தில் சுரங்கத்தை தோண்ட அரசாங்கம் முடிவெடுக்கிறது. ஆனால், இதை செய்தால் மக்களின் இடம் பறிபோகும் என்று அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக பெருமாள் வாத்தியார் { விஜய் சேதுபதி } தலைமையில் மக்கள் படை ஒன்று உருவாகிறது.
தனது மக்கள் படை உதவியின் மூலம் அரசாங்கத்தை எதிர்த்து போராடி சுரங்கத்தை தோண்டவிடாமல் செய்கிறார் பெருமாள் வாத்தியார். மக்கள் படையை முழுமையாக ஒழித்துக்கட்ட அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படுவது தான் சிறப்பு படை. இதில் கைதேர்ந்த காவல் அதிகாரிகளை வைத்து பெருமாள் வாத்தியாரின் மக்கள் படையை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இதில் மக்கள் படையிலும் எண்ணிலடங்காத உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. அதே போல் சிறப்பு படையை சேர்ந்த காவல் அதிகாரிகளும் இறக்கிறார்கள். இப்படி 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் போராடி வருகிறார். இந்த நேரத்தில் சிறப்பு படையில் ஜீப் ட்ரைவாக வந்து சேர்கிறார் கதையின் நாயகன் சூரி { குமரேசன் }.
இதற்காக புதிய அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார் கவுதம் மேனன் { DSP சுனில் மேனன் } . இந்த நிலையில், ஒரு நாள் பெருமாள் வாத்தியார் தங்கியிருக்கும் இடத்தை சூரி பார்த்துவிடுகிறார். இதனை பல முறை மேல் அதிகாரிகளிடம் சொல்ல முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
ஆனால், ஒரு நாள் இதை தன்னுடைய மேல் அதிகாரியான கவுதம் மேனனிடம் கூறி, பெருமாள் வாத்தியாரை பிடிக்க அவர் பதுங்கியிருக்கும் இடத்திற்கு அதிகாரிகளுடன் சூரி செல்கிறார். இதன்பின் என்ன நடந்தது..? 25 ஆண்டுகளாக எந்த ஒரு அதிகாரியாலும் பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை சூரி பிடித்தாரா? இல்லையா? பெருமாள் வாத்தியாரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழிகள் எல்லாம் உண்மை தானா? என்பதே மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
மீண்டும் மீண்டும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர் வெற்றிமாறன். எதார்த்தமான இயக்கம், சில தொய்வுகள் இருந்தாலும் மிரட்டும் திரைக்கதை, படத்தில் இடம்பெறும் வசனங்கள் என கதைக்களத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். எளிய மக்கள் மீது கடுமையாக பாயும் சட்டம், போலீஸ் அதிகாரிகள் செய்யும் கொடுமைகள், குறிப்பாக பெண்களிடம் போலீஸ் நடந்துகொள்ளும் விதம் உள்ளிட்ட காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
கதையின் நாயகனாக வரும் சூரி எதார்த்தனமான நடிப்பில் கைதட்டல்களை அள்ளுகிறார். ’தவறு செய்தால் தானே மன்னிப்பு கேட்கவேண்டும், மக்களுக்கு உதவதானே காவல் துறை’ என சூரி பேசும் வசனங்கள் சூப்பர். மேலும் ஸ்டண்ட் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கையில் துப்பாக்கி கிடைத்தவுடன் சூரி எடுக்கும் அவதாரம் செம மாஸ். அதுமட்டுமின்றி காதல் காட்சியிலும் அழகாக நடித்துள்ளார்.
கதாநாயகி பவானி ஸ்ரீ சூரிக்கு இணையான நடிப்பை திரையில் வெளிப்படுத்தியுள்ளார். அதற்க்கு தனி பாராட்டு. குறிப்பாக காவல் அதிகாரிகளால் கொடுமையை அனுபவிக்கும் பொழுது தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.
பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி, சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அதற்கான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் ஆட்டம் பெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் காவல் அதிகாரிகளில் ஒருவராக வரும் நடிகர் சேத்தன் எளிய மக்களுக்கு எதிராக ஈவு இரக்கம் காட்டாத நபராக சிறப்பாக நடித்துள்ளார். கவுதம் மேனன் வருகைக்கு பின் படம் சூடு பிடிக்கிறது. ராஜிவ் மேனன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். மற்றபடி அனைவரும் படத்தின் திரைக்கதையோடு ஒன்றி போகிறார்கள்.
இளையராஜாவின் பாடல்கள் கேட்க இனிமை, பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு சிறப்பு. மலைப்பகுதிகளில் கேமராவை கையாடுள்ள விதமும், லாக்கப் குள் கையாண்ட விதமும் பிரமாதம். எடிட்டிங் படத்தின் கதையை அழகாக எடுத்து சொல்கிறது. ஆக்ஷன் காட்சிகள் வடிவமைத்த விதம் சூப்பர்.
பிளஸ் பாயிண்ட்
வெற்றிமாறன் இயக்கம், திரைக்கதை எடுத்துக்கொண்ட கதைக்களம்
சூரியின் எதார்த்தமான நடிப்பு
பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், சேத்தன் நடிப்பு
பின்னணி இசை
சில காட்சிகள் வந்தாலும் விஜய் சேதுபதி ஏற்படுத்திய தாக்கம்
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக எதுவும் இல்லை