வல்லினம்
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.
மெல்லினம்
மெல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. வல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், ங், ஞ், ண், ந், ம், ன் எனும் ஆறு எழுத்துகளையும் மெல்லின எழுத்துகள் என்கின்றன. இவை மெலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை மெலி, மென்மை, மென்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.
இடையினம்
இடையினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. வல்லினம், மெல்லினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், ய், ர், ல், வ், ழ், ள் எனும் ஆறு எழுத்துகளையும் இடையின எழுத்துகள் என்கின்றன. இவை வல்லினம் பிறக்கும் இடமான மார்புக்கும் மெல்லினம் பிறக்கும் இடமான மூக்கிற்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் இருந்து பிறப்பதால் இடையினம் எனப்படுகின்றன. இவற்றை இடை, இடைமை, இடைக்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.