வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

மசாலா டீ:

சுவையும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய டீ. இது தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லாவற்றிலும் மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனை மசாலா சாய் என்று சொல்வார்கள். சாதாரணமாக டீ-யில் ஏலக்காய் அல்லது இஞ்சி தட்டி சேர்ப்பார்கள், அது தவிர பட்டை, லவங்கம் போன்றவற்றையும் சேர்த்து செய்யும்போது சுவையும், மணமும் அபாரமாக இருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

சுவையான மசாலா டீ செய்ய சில குறிப்புகள்:

  • திக்கான பால் அல்லது தண்ணீர் சேர்த்து சிறிது இலகுவான பால் என எது வேண்டுமானாலும் உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  • ஏற்கனவே காய்ச்சிய பாலை மீண்டும் சூடு படுத்தாமல் பிரஷ்ஷாக பாலை காய்ச்சி பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
  • மசாலா பொருட்களை கல்லில் இடிக்கலாம் அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து இடிக்கும் பொழுது ஏலக்காய் விதை தூளாகும் வரை இடித்து கொள்ளவும்.
  • சூடான தண்ணீரில் டீ தூளை சேர்த்து நன்றாக கொதித்த பின்னர் மசாலா பொருட்களை சேர்க்கவும்.
  • மசாலா பொருட்கள் மற்றும் டீத்தூள் ஆகியவை மணம் வரும் வரை அல்லது பாதியாக சுண்டும் வரை காய்ச்சி அதன் பின்னர் டீ போடவும்.
  • டீத்தூள் மற்றும் சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • டீ டிகாஷன் செய்ய தண்ணீரை சேர்க்கும் பொழுது உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பால் – 2 கப்
  • ஏலக்காய் – 6
  • பட்டை – 1 துண்டு
  • லவங்கம் – 4
  • இஞ்சி – 1 துண்டு
  • டீ தூள் – 2 தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
  • சர்க்கரை – 2 தேக்கரண்டி/ தேவைக்கேற்ப

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து காய்ச்சவும்.

  • ஒரு இடிக்கும் கல் அல்லது மிக்சி ஜாரில் 6 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

  • அதனுடன் 1 துண்டு பட்டை சேர்க்கவும்.

  • பின்னர் 4 லவங்கம் சேர்த்து நைசாக இடித்துக் கொள்ளவும்.

  • கல்லில் 1 துண்டு இஞ்சி சேர்த்து இடிக்கவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

  • ஒரு பானில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்துக் கொள்ளவும்

  • டீத்தூள்கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் இஞ்சியை சேர்த்து கலக்கவும்.
  • அதனை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் அல்லது பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் 2 தேக்கரண்டி அல்லது உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  • பால் பொங்கி வந்ததும் அதனை டீ டிகாஷன் உடன் சேர்த்து கொள்ளவும்.
  • மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
  • அதனை ஒரு வடிகட்டிக் கொண்டு வடிகட்டி சூடாக பரிமாறவும்.
  • சுவையான மசாலா டீ தயார்.